Tuesday, May 20, 2014


எங்கே தேடுவேன்?




"கான ரீங்காரம் செய்யும் கருவண்டே! நீ தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம் என் நிலை சொல்லு!" என்ற ஓர் அருமையான பாடலை ஒரு தடவை கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது! 

ஓயாமல் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் மூளையில், loop ஆகி, ஓடிக் கொண்டே இருக்க, முழுப் பாட்டின் வரிகளுக்காகவும் தவித்தது என் உள்ளம்! 

இன்றுபோல் Internet வசதிகள் இல்லாத காலம் அது! எனவே ‘நெட்’டில் தேடவும் வழியில்லை. (இப்பொழுது மட்டும் என்ன? Net-ல் தேடியும் கூட, அந்தப் பாடல் முற்றாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!) 

எனவே, பாடத் தெரிந்தவர், தெரியாதவர், கண்டவர், காணாதவர், தெருவில் போனவர், போகாதவர், வந்தவர், வாராதவர் என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ”இந்தப் பாடலின் முழு வரிகளும், யாருக்காவது தெரியுமா? தெரியுமா?” என்று விடாமல் நச்சரிக்க ஆரம்பித்து, பின் அதுவே என் முழு நேரத் தொழிலாகிப் போனது! 


“உதிர்ந்த மலர்களைத்” தேடி ஒரு காலத்தில் ’அலையோ அலை’ என்று அலைந்த, தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் மட்டும் இருந்திருந்தால், ஒருவேளை, என் நிலை கண்டு உணர்ந்தவராக, பரிவாக இரண்டு வார்த்தைகள் பேசித் தேற்றியிருப்பாரோ, என்னவோ? 

இப்படியாக,என் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டே இருந்த போது, கட்டக் கடைசியில், இந்தப் பாடல் தெரிந்த ஒருவர், ஒரு நாட்டியப் பள்ளியில் நடனம் பயில்கின்ற ஒரு மாணவி, சிக்கினார்! 

அப்பாடா! ஒரு வழியாகப் பாடல் கிடைச்சாச்சு!என்று நிம்மதிப் ’பெருமூச்சு’ விடப் போகும் நேரத்தில், அந்த மாணவி, “ஆனால் எனக்குப் பாதிப் பாடல்தான் தெரியும் அங்கிள்!” என்று இரக்கமின்றிச் சொல்லிவிட, அதிர்ந்து போனேன்! 

என்ன செய்வது? வேறு வழியின்றி, “அம்மா! தாயே! தெரிந்தவரைக்கும் சொல்லம்மா!” என்று வேண்டி, அந்த மாணவி, தனக்குத் தெரிந்தவரை சொன்ன பாதிப் பாடலைக் கவனமாகக் கவர்ந்து கொண்டேன்! பிறகு என்ன? பழையபடி மீண்டும் என் தேடுதல் வேட்டைதான்! 

ஆனாலும், ’இதற்கு மேலும் தேடிப் புண்ணியம் இல்லை!’ என்று தேடுதலில் ஒரு கட்டம் வரும் அல்லவா? அது வந்தது! அப்போது, ஒரு சின்ன வேலை செய்தேன், பாருங்கள்! என்ன ஆச்சரியம்! முழுப் பாடலும் கிடைத்தே விட்டது! 


"அப்படி என்னதான் செய்தாய்?” என்கிறீர்களா?" ஹா!...ஹா!...ஹா...! வேறு ஒன்றுமில்லை, Gentle man! மீதிப் பாடலையும், நானே கற்பனை செய்து, எழுதி விட்டேன்! 

ஆமாம்! வேறென்ன செய்ய? 

பாடலின் பிற்பாதி வரிகளை, முழுக்க முழுக்க, என் சொந்தச் சரக்காக, நானே எழுதி விட்டேன்! 

அதுமட்டுமா? பின்னாட்களில், இந்த முழுப்பாடலையும், என் புதல்வி, பல்வேறு பாட்டுப் போட்டி மேடைகளில் பாடப்போக, பாடிப் பரிசுகளும் கிடைக்கப் போக, நிகழ்ச்சிகளில் பங்கு பெற வந்தவர்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தவர்கள், மேடைகளில் இசைக் கருவிகளை வாசிக்க வந்த பக்க வாத்தியக் கலைஞர்கள் என்று, பலராலும் இந்தப் பாடல் விரும்பப்பட்டு, இந்தப் பாடலின் வரிகள் அவர்களில் பலராலும் கேட்டு எழுதி வாங்கிச்செல்லப் பட்டன என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! 

பிறிதொரு சமயம், இந்தப் பிற்பகுதிப் பாடல் ’என்னால் எழுதப்பட்டது” என்று அறிந்ததும், ஒரு வயலின் கலைஞர் மிகவும் சிலாகித்துப் பாராட்டி, “அதானே பார்த்தேன்! என்னடா,  2nd half portion வேற மாதிரிப் பாடிக் கேட்டிருந்ததா ஞாபகமாச்சேன்னு நெனச்சுண்டே, வாசிச்சேன் சார்!” என்று சொன்னவர், “நீங்கள் எழுதிய portion-ம் ரொம்ப opt-ஆ, பொருத்தமா இருந்தது சார்! பேஷ்! பேஷ்!” என்று பாராட்டி என் கையைப் பிடித்துக் குலுக்கினார். 

உடனே நான் உஷாராகி, “அப்படியா சார்? அந்த original வரிகள் இப்பொழுது உங்களுக்குத் தெரியுமா?” என்று மீண்டும் பழையபடி பரபரப்பானேன்! 

“அடடா, அதெல்லாம் தெளிவா என் ஞாபகத்திலே இல்லே! அது போகட்டும், அது கிடைக்கிறவரை உங்களோட  வரிகளே இருக்கட்டுமே! ரசிகாளும், நீங்களே complete செஞ்ச பாடல்னு தெரிஞ்சதும், ரொம்ப சிலாகிச்சுப் பேசினா பாருங்கோ!” என்று சொல்லி, அவர் மீண்டும் கைகளை அழுத்தமாகக் குலுக்கி விட்டுப் போக, எனக்குக் கை வலித்தது! 

கை மட்டுமா வலித்தது? 

அந்த  original பாடலை எழுதிய கவிஞர் இன்று இருந்து, அவருக்கு, இந்தப் பாடல் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், அவர் எப்படி feel பண்ணுவார் என்று நினைத்து,  என் மனசும் கூடச் சேர்ந்து வலித்தது! 

ஆனால் ஒன்று! என்றாவது ஒரு நாள், அந்த original வரிகள் எனக்குக் கிடைக்கும் பட்சத்தில், நிச்சயம்  நான் எழுதிய என் வரிகள் என்னாலேயே நீக்கப்பட்டு, அந்த அசல் வரிகள் சேர்க்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஹூம்...நல்லது!

தில்லைக் கூத்தனான சிவபெருமானின் மீது, அதீதக் காதல் கொண்டு, விரக தாபத்தில் ஒரு பெண் பாடுவதாக அமைந்த, அந்த அற்புதப் பாடலை இப்பொழுது பார்ப்போமா?




பாடல்: கான ரீங்காரம் செய்யும் கருவண்டே!
எழுதியவர்: சுத்தானந்த பாரதி(யா?) (தெரிந்தவர்கள் சொல்லலாம்!)
ராஹம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி




கான ரீங்காரம் செய்யும் கருவண்டே! - நீ
தேனூறும் சொல்லாலே,                  
தில்லை நாதனிடம் என்நிலை சொல்லு!                                  (கான)

உள்ளத்தில் அவன்காதல், ஊற்றுப் பெருக்கெடுத்து,
வெள்ளமாய்ப் பாய்ந்தோடி, விளைந்தது எனதன்பு!
ஆடும் அவன்பாதம்; அதைநாடும் எனதாவி!
வானநிலா முகிலும், வசந்தமழைக் காற்றும்,
மானும், மயில்,குயிலும் மையலூட்டி மயக்குதென்னை!           (கான)

(அடுத்து வரும் கீழ்க்கண்ட வரிகள்தான் நான் எழுதியவை!)

சொல்லவோ அவன்அழகை? சொல்லிலும் அடங்காது!
எழுதவோ அவன்பெருமை! ஏட்டிலும் அடங்காது!
ஊணுறக்கம் மறந்தேன்! உடல்தேயும் பிரிவாலே!
கைவளைகள் கழலும்; கசந்துவிடும் பாலும்;
கனலும், உளம்,உயிரும்! காதல் தீயும், உருக்குதென்னை!          (கான)



You can listen to the song sung by my daughter Mahima Natarajan below:
என் மகள் மஹிமா நடராஜன் பாடிய இந்தப் பாடலைக் கீழே கேட்கலாம்:



You can also directly goto
www.muziboo.com
to listen to the song
Gaana Reengaaram Seyyum Karuvande!- கான ரீங்காரம் செய்யும் கருவண்டே!

1 comment:

  1. வானநிலா ஒளியும் வசந்த மலர் காற்றும்
    மானும் மயில் குயிலும் மையலூட்டி மயக்குதன்றோ (கான)
    உள்ளத்தில் அவன் காதல் ஊற்று பெருக்கெடுத்தே
    வெள்ளமாய் பாய்ந்தோடி விளைந்தது என் அன்பு
    துள்ளிக்குதித்து இன்ப துணை நாடும் எனதாவி
    கொள்ளையிட்ட கள்வன் தில்லைக்கூத்தன்
    குறை தீர்ப்பானோ (கான)

    ReplyDelete