Monday, May 12, 2014


ஒரு வார்த்தை பல அர்த்தம்



செய்யுள்:


கரியே! கரிகரிக்கக் கரியுண்டி கரிக்கப்போய்
கரியாலே கரியாகக் கரித்தாயே எனக்கரித்துக்
கரிந்திட்டுக் கரிநிறத்துக் கரிபோலும் கரியான்தன்
கரிணிக்குக் கரியாலே கரிசெய்து கரில்செய்யும்!


”கரி! கரி!” என்று கரித்துக் கொட்டிய இந்தச் செய்யுளின் அர்த்தமாவது:




"வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் முகம் சுளிக்கும்படியாக,
அவர்களுக்காகச் சமைத்த வெண்பொங்கலை,
அடுப்பில் வெகு நேரம் வைத்துத் தீய்த்துக்
கரி போலக் கரித்துவிட்டாயே, கேடு கெட்ட கழுதையே!"
என்று, வெகுண்டு, வசைபாடி,
கரிய யானை போன்ற தோற்றமுடைய (கோபக்காரக்) கணவன்,
கையால், தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறான்.


அவ்வளவுதான் இதற்கு அர்த்தம்!
இதற்கு விளக்கமான பதவுரையாவது:


கரியே!-(அட, கேடு கெட்ட) கழுதையே! (வசவுக்காக இப்படிச் சொல்வது உண்டு!)
கரி-விருந்தினர்கள்
கரிக்க-(முகம்) சுளிக்கும்படியாக
கரியுண்டி-மிளகு உணவு (say for example, வெண்பொங்கல்)
கரிக்கப்போய்-சமைக்கப்போய்
கரியாலே-அடுப்பு நெருப்பாலே
கரியாக-கரி போல (வெகு நேரம் தீய வைத்து)
கரித்தாயே-கரிக்கச் செய்துவிட்டாயே
எனக்கரித்து-என்று கோபித்து
கரிந்திட்டு-வசை பாடி
கரிநிறத்து-கரிய நிறமுடைய
கரிபோலும்-யானை போன்ற
கரியான்-கணவன்
கரியாலே-கையால்
கரிசெய்து-அடித்து
தன்கரிணிக்கு-தன் மனைவிக்கு
கரில்செய்யும்-துன்புறுத்தலைச் செய்கிறான்!


முக்கிய குறிப்புரை:


மன்னிக்கவும்!
”இது ஏதோ சங்க காலத்துப் பழைய செய்யுள்!” என்று
நீங்களாக நினத்துக் கொண்டால்
அதற்கு நான் பொறுப்பல்ல!
கல்லூரி நாட்களில், பொழுது போகாமல்,
தமிழ் அகராதியைப் புரட்டிக் கொண்டிருந்தபொழுது,
'கரி' என்ற ஒற்றைச் சொல்லுக்கு,
கழுதை, விருந்தினர், சுளி, மிளகு, சமை,
நெருப்பு, கரி, கோபம் கொள், வசை, யானை, கை, அடி
என்று பலப்பல அர்த்தங்கள் தந்திருப்பதைப் பார்த்து,
அந்த வார்த்தையை மையமாக வைத்து,
நான் எழுதிப் பார்க்க முனைந்ததன் விபரீத விளைவுதான்
நீங்கள் மேலே அட்டகாசமாக(?) அனுபவித்த செய்யுள்! நன்றி!

No comments:

Post a Comment