Thursday, June 5, 2014


சித்தர் நெறி - Part 1 of 2




(எனக்குப் படிக்கக் கிடைத்த அரிய விஷயங்களில் ஒன்று என்று இந்த ”சித்தர் நெறி” என்கின்ற தொகுப்பைச் சொல்லலாம்! ஒரு மாறுதலுக்காகவாவது, நீங்களும்தான் இதனைப் படித்து வையுங்களேன்!)



சித்தர்

அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப் பொருளாகச் சித்தன் - கிருத கிருத்தியன், செய்ய வேண்டுவனவற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன், எண்வகைச் சித்திகளையும் உண்டாக்குகின்றவன் என்று விளக்குகிறார்.சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துகளை உண்டாக்கி, பக்தி நெறியல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தனர் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும், மு. அருணாசலமும் தெரிவிக்கின்றனர்.





சித்தர் தன்மைகள்

சித்தர்கள் சமயக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கென்றொரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழி ஒழுகினர். மத மாச்சரியங்கள், சாதி பேதங்கள், உயர்வு தாழ்வு இவை அனைத்தையும் கடந்து நின்றார்கள். சித்தர்களைப் பற்றிய பல்வேறு கதைகளும் கருத்துகளும் நாட்டில் நிலவி வருகின்றன. சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் செவி வழியாகவும் நூல் வழியாகவும் மட்டுமே கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன. சித்தர்கள், உலகத்தின் பொருள் வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வழியை வகுத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் காணப்படுகின்றனர். நோயற்ற வாழ்வும் சாகாநிலையும் மனிதன் அடையக் கூடிய இடம் என்று நிரூபித்தனர். சித்தர்களின் முறைகள் அறிவியல் பார்வைக்கு உடன்பாடாக இருக்கின்றன. சித்தர் செயல்களைத் தோற்றுவித்தவராகச் சிவனையும், தமிழகத்தில் சித்தர் மரபை உருவாக்கியவராகத் திருமூலரையும் குறிப்பிடலாம்.




சிவம் - பொருள் விளக்கம்

‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் –“The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought.” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். “சிவ” என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி ((Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும்.”புலித் தோலாடையும், பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின!” என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.


சதாசிவம்

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.

வழிபாட்டில் சிவன்

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன் என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது. பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்

முக்கண் செல்வன்
கரை மிடற்றண்ணல்
காரி உண்டிக் கடவுள்
தாழ் சடையன்
புரமெரித்தோன்
கொன்றை மாலையன்
ஆலமர் கடவுள்

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே.

”என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்!” என்பர். மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை. “சேயோன் மேய மைவரை யுலகம்” எனத் தொல்காப்பியம் குறிப்பது ’சிவனையேயாதல் வேண்டும்’ என்பதும் சரியாகத் தோன்றவில்லை. புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.

சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற்கொண்ட உணவுமுறை இதுவே. ’சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது’ என்பர். சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந்தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

முதல் சித்தன் சிவன்

சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும். சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்

சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்

நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்

சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே

சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே

நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்

சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்
பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது

சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல

தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல

என்பன போன்ற ஒத்த கருத்துகளைச் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.


மருத்துவ நூல்களில் சிவன் மரபு


தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர்க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப்பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது. சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடுகின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம். இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்தி குறியீடு

கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

திரிந்துபார் தாவரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும்பாழென் றெண்ணாதே சிவமென் றெண்ணு

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர்; மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம் என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்

சிவன் சித்தர்

சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு

மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.

தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம். இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்தி நூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும். சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப்படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

திருமூலர்

திருமூலரின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளவை சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துள் திருமூல நாயனார் புராணமும், நம்பியாண்டார் நம்பி திரு மூலரைப் பற்றிப் பாடிய பாடலும், ‘தமிழ் மூவாயிரம்’ என்னும் திரு மந்திரப் பாயிரத்தில் உள்ள ‘திருமூலர் வரலாறு’ என்னும் அதிகாரமுமாகும். இவற்றுள், பாயிரத்தில் உள்ள பல பாடல்கள் இடைச் செருகலாக உள்ளன.

திருமூலர் பொதிகை மலையில் அகத்தியரைக் காண்பதற்காகக் கயிலை மலையிலிருந்து தென் திசைக்கு வந்தார் என்ற பெரிய புராணச் செய்திக்குத் திருமந்திரப் பாயிரத்தில் ஆதாரம் யாதுமில்லை. மாறாக, ஆசிரியர் நூலினுள் அகத்தியரின் வரலாற்றைஅவர் பொதிய மலைக்கு வந்த காரணத்தை ஒரு புராணக்கதை போலக் கூறுகின்றார். அகத்தியர் பற்றிய வரலாறுகள் பல. அவற்றுள் எந்த அகத்தியர் திரு மூலருக்குச் சம காலத்தவர் எனத் தெரியவில்லை.

‘திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார், ஆண்டுக்கு ஒரு பாடலாகத் திருமந்திரப் பாடல்களை இயற்றினார்’ என்று சேக்கிழார் கூறும் செய்தி அவர் செவி வழிக் கேட்டதாதல் வேண்டும். திருமூலர் யோக ஆற்றலால் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால், யோகத்தில் 3000 ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொரு பாடலாகத் திருமந்திரத்தைப் பாடினார் எனக் கொள்ளுதற்குச் சான்றில்லை. மாறாக, திருமந்திரத்தின் பல பகுதிகளை நோக்கும் போது, அவை ஒருங்கே ஒரு காலத்தில் செய்யப்பட்டனவாகத் தோன்று கின்றனவே அன்றி, ஆண்டுக்கொரு பாடலாக வெளிப் போந்தவையாகத் தோன்ற வில்லை.

இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் திருமூலரின் காலத்தைக் கண்டறிவதில் இடர் பாடுகள் உள்ளமையைத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இங்கு ஒரு சில அகச் சான்றுகளைக் கொண்டு அவரது காலத்தை வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் திருத் தொண்டத் தொகையுள் ‘நம்பிரான் திருமூலர்’ எனக் குறிப்பிடுகின்றமையால், 8ஆம் நூற்றாண்டையே திருமூலரின் காலத்திற்குப் பின் எல்லையாகக் கொள்ளலாம். திரு மந்திரத்துள் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்னும் குறிப்பு வருகிறது. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுடன், கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் சேர்ந்து ஐந்து மண்டலங்களாக எண்ணப்படும் வழக்கு உண்டான பின்னரே திருமூலர் நூல் பாடியிருக்க வேண்டும்.

சங்க இலக்கியத்திலும், சிலம்பிலும் கொங்கரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன என்ற போதிலும் கொங்கு மண்டலம் என்ற குறியீடு இல்லை. தொண்டை மண்டலம் என்ற வழக்குப் பல்லவர் ஆட்சிக்குப் பின்னரே உண்டாயிற்று. பல்லவரின் ஆட்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம்நூற்றாண்டு வரை நிலவியது. திருமூலர் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார். சிற்றம்பலத்தில் முதன்முதலில் பொன்வேய்ந்தவன் ஆம் நூற்றாண்டில்ஆட்சி புரிந்த பல்லவ மன்னாகிய சிம்மவர்மன் ஆவான்.

தேவார காலத்திலும் அதற்குப் பின்னும் சமய, காப்பிய இலக்கியங்களைப் பல்வகை விருத்தயாப்புகளில் பாடும் வழக்கம் இருந்தது. திருமூலரோ கலிவிருத்த யாப்பையே மேற்கொண்டுள்ளார். இக்காரணத்தால் அவர் தேவார காலத்திற்கும் முன்பிருந்தவராதல் வேண்டும். வெள்ளை வாரணனார் திருமந்திரத்தின் சொற்கள், தொடர்கள் ஆகியவை மூவர் தேவாரத்திலும் ஆளப் பெற்றமையை எடுத்துக் காட்டுகின்றார்.

மேற்குறித்த காரணங்களைக் கொண்டு திருமூலர் நூல் பாடிய காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினை யொட்டிச் சற்று முன்பின்னாகக் கொள்ளப் படலாம்.

நந்தியின் சீடர்கள்எண்மர். அவர்கள் ‘நாதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றவர். அவர்கள் நான்கு நந்திகள், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர், திருமூலர் என்போர். திருமூலருக்குச் சிவன் ஏழுலட்சம் முறைகளைக் கூறினார். அவைகளைத் திருமூலர் செய்து பார்த்துத் தேர்ந்தார். அம்முறைகளைச் சுருக்கிச் கொங்கணர் பாடினார். திருமூலர் அறிந்த முறைகளைக் கொங்கணர் பாடினார் என்றதனால் கொங்கணர் திருமூலரின் மாணவராதல் வேண்டும்.
திருமூலர் சோழனின் வேண்டுகோளுக்கிணங்க சிதம்பரத்தில் நடராசன் சிலையைத் தங்கத்தால் வார்த்துத் தந்தார் என்று அகத்தியர் குறிப்பிடுவதனால் திருமூலருக்கு அகத்தியர் சமகாலத்தவராகவோ அல்லது பிற்பட்டவராகவோ இருக்கலாம்.

வெல்லுமே யினியென்ன இராசாளி முன்னே
மேவுமோ கொக்குகள் கொங்கணரே ஐயா
சொல்லுமே சட்டைமுனி சொன்ன வாரே
தூண்டினதை மூலரென் சிறிய தந்தை
பல்லுறவை படித்தாரே பிண்ணாக் கீசர்
பாடுமென்ற உரைப்படி பாடி னேனே

என்னும் மச்சமுனி உரையால், திருமூலர், கொங்கணர், சட்டைமுனி, பிண்ணாக்கீசர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவராவர்.

செய்யவே திருநீல கண்டர் வைப்பு

நீலகண்டர் உரைத்திருத்த பாண்டம் கூட

உள்ளபடி திருநீல கண்டர் வித்தை
உற்றுப்பார் திருமூலர் உரைத்தா ரப்பா

என்பதனால், திருநீலகண்டரும் மச்சமுனியும் சமகாலத்தவராகக் கருதலாம்.

பான்மையாம் கொங்கணரும் இந்த பாகம்
பாரினிலே களங்கமறச் சொல்ல வில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தி யருக்கு
மேதினியில் விளக்கமறச் சொல்ல வில்லை
வாண்மையுடன் புலிப்பாணி இந்த பாகம்
வசனித்தார் ஆயிரத்து வன்னூ ருக்குள்

ஆமேதான் அகத்தியரும் முன்னே செல்ல
அன்பான தேரையரும் பின்னே செல்ல

என வரும் போகரின் குறிப்புகளால் கொங்கணர், அகஸ்தியர், புலஸ்தியர், புலிப்பாணி, தேரையர் ஆகியோர் போகரின் காலத்தவர்களாகவோ முற்பட்டவர்களாகவே இருக்கலாம்.

பொய்யுரையான் சத்தியங்கள் மெத்த வுண்டு
ஆகனவன் திண்டுடலன் குச்சிக் காலன்

போகர், பொய்யுரைக்காத வாய்மையாளர் என்றும், தடித்த உடலும் குச்சிக் காலும் கொண்டவர் என்றும் உரைப்பதனைக் கொண்டு, காகப்புசண்டரும் போகரும் சமகாலத்தவர் என்று கொள்ளல் தகும்.

மெச்சுவேன் யாகோபு தேரை யாரை
வேணபொருள் வைத்திருக்கும் அகஸ்திய நாதன்
குச்சுப் போற் தானிருக்கும் கோரக்கன் தன்னை
குடுகுடுக்கைக் கஞ்சாவைக் கொட்டி மேய்ந்தான்

என்றதனால் யாகோபு, தேரையர், அகத்தியர், கோரக்கர் ஆகியோரின் காலமே காகப்புசண்டர் காலமும் ஆகலாம்.

ஆளான ரோமரிஷி பாட்ட னுக்கு
அழகாக வந்துதித்த இராம தேவன்

ரோமரிஷி, இராமதேவர் ஆகியோரை போகரின் காலத்தொடு கூறலாம்.

தெள்ளுதமிழ்க் கவிவாணர் இவர்க்கு ஈடுண்டோ?
செந்தமிழின் சுவையறிந்த சிவ வாக்கியர் தான்

என்றதனால் போகருடன் சிவ வாக்கியரை இணைத்துக் காணத் தோன்றும். நபிகள் நாயகத்தை யாகோபு கண்டு வந்ததாகப் போகர்49 குறிப்பிடுவதிலிருந்து நபிகள் காலமே சித்தர்களின் காலமும் ஆகலாம்.

சட்டமுனியின் உபதேசத்தால் ஞானம் பெற்ற பாம்பாட்டிச் சித்தர், வெகுகாலம் வாழ்ந்திருந்து, சமாதி அடைந்தார். “சேக்கிழார் அறுபத்து மூவர் தானோ” என, காகப்புசண்டர் உரைப்பதனால் சேக்கிழார் காலத்திற்குப் பிற்பட்டவர் காகப்புசண்டர் எனலாம்.

கோரக்கரும் போகரும் சம காலத்தவர் என்றும், இவர்கள் காலத்திலேயே பதினெண் சித்தர்களும் வாழ்ந்தனர் என்றும், அது கி.பி. மூன்றிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் பேராசிரியர். ந. சேதுரகுநாதன் கருதுகிறார்.

போகர் சீன நாட்டைச் சேர்ந்த மண்பானை முதலியவற்றைச் செய்பவர் என்பர். இவரைப் பௌத்தத் துறவி என்றும் சீனப்பயணியாக 1600 ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டுக்கு வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான சில இடங்களைக் தரிசித்துவிட்டு தமிழ் நாட்டுக்கு வந்தவ ரென்றும் கூறுவர்.

கேளேநீ கலியுகத்தில் இருநூற் றைந்தில்
கேசரிபோல் புலிப்பாணி பேரும் பெற்றேன்

என்பதிலிருந்து கலி 205இல் புலிப்பாணி என்னும் பெயரைப் பெற்றதாக உரைப்பதிலிருந்து இவரின் காலம் (கிறித்து ஆண்டு, கலியாண்டு 3101லிருந்து துவங்குகிறது) 3101-205 = 2896, கி.மு. 2896 என்றாகிறது.

புலிப்பாணி போகரின் மாணவராகக் கருதப் படுவதனால் அதுவே, போகரின் காலமாகலாம்.

“சோழ நாட்டில் காவிரி நதியின் பாங்குற்ற கொள்ளிட நதி தீரத்தில் அமைந்துள்ள பரூர்ப்பட்டி என்னுஞ் சிற்றூரில் உள்ள, சடையப்ப கவுண்டன் என்பவர் என்னை அனுசரித்து வாழ்த்தி நின்றார். ஆங்கே, பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில், சமாதி நிலையுடைந்தேன். சித்தனாகிய எனக்கு மரணம் என்பதோ இல்லை. அதே போன்று, பரிவிருத்தி ஆயிரத்து நூற்றியிருப்பதாறாவது ஆண்டில் சமாதி அடைந்த சித்தர்களுடன் வெளியே வந்து, கருணையுடன் மக்களை ஆள்வோம்” என்பதால் கோரக்கர் காலம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 என்றாகும்.

உத்தமஞ்சி வாடுசுமி நீ வெனவே
மனர் வடுகி லுரைத்தல் போல்

என்று தெலுங்கு வேமன்னரைக் குறிப்பிடுவதனால், வேமன்னர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் தேரையரையும் 15ஆம் நூற்றாண் டெனலாம். மேலும் “உருளைக் கிழங்கு கற்பம்” பற்றி கரிசலில் குறிப்பிடுவதனால், உருளைக் கிழங்கு தென்னிந்தியாவுக்கு வந்தது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு என்று அறிவதனாலும் தேரையர் சற்றேறக் குறைய 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு என்பர்.

உருளைக் கிழங்கு, தேரையர் காலத்தை அறியப் பயன்படுமா என்பதில் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் விளை பொருளாக ஆனது 16 ஆம் நூற்றாண்டு அவ்வளவே, பொருளாகவோ, மருந்தாகவோ அதற்கு முன்பிருந்தும் வந்து கொண்டிருக்கலாம்.

ஆனாலும் வேமன்னர் பற்றிய குறிப்பு காணப்படுவதிலிருந்து ஓரளவுக்கு வேமன்னர் காலத்தொடு தொடர்பு இருப்பதாகக் கருதலாம். என்றாலும், பதிகப்பாடல்கள் மூலநூலாசிரியர் தான் இயற்றினார் என்பதிலும் ஐயம் தோன்றுகிறது.

தமிழில் உள்ள மருத்துவ நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிவதில் பெருத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளைக் கூறுமிடத்து ஒன்றுக் கொன்று மாறுபட்ட தகவல்களாகவே இருக்கின்றன.

அகத்தியர் என்னும் சித்தர்காலத்தைக் கண்டறிந்த அறிஞர்கள், அகத்தியர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியம் போன்றவற்றில் 37 பேர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களில் மருத்துவம் போன்ற முறைகளைச் செய்த அகத்தியர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகவும் கருதுகின்றனர்.

மருத்துவ நூலுள் காணப்படும் செய்திகளைக் கொண்டு பார்த்தால், திரு மூலருக்கும் அகத்தியருக்கும் தொடர்பிருந்தது தெரிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரோடு எப்படித் தொடர்பு கொண்டிருக்க முடியும்? கோரக்கர் நூல், கோரக்கர் கி.பி. 1233இல் சமாதி அடைந்தாகக் கூறுகிறது. ஆனால், அந்நூல் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

போகர், 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பர். புலிப்பாணி, தன்நூலில் போகருக்குப் பின் தான் பழனி கோயில் முறையைச் செய்யத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிடும் போது, அது கி.மு. 2896 எனத் தெரிகிறது. அப்படியானால் புலிப்பாணி போகரின் மாணவர் என்பது பொருந்தாது. அதே போல் தேரையர் கி.பி. 16ஆம் நூற்றாண்டு என்பர். இவரும் போகரின் மாணவர் என்பர் இதுவும் பொருந்தவில்லை. திருமூலரும் போகரும் சமகாலத்தவராக மருத்துவ நூல் கூறுகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரும், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போகரும் எப்படிச் சமகாலத்தவராகக் கருத முடியும்? என்றாலும், ஒரு சில ஆண்டுகள் முன் பின்னாக இருந்து, இவ்விருவரும் சமகாலம் என்பது ஓரளவுக்கு ஒத்துப் போகலாம். மற்ற சித்தர்கள் காலம் ஒத்துக் காணப்படவில்லை.

எனவே, தற்போது வழங்கி வரும் நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிய முயல்வது முறையாகத் தோன்றவில்லை. அவை அனைத்தும் பிற்காலத்தில் பலரால் இயற்றப் பெற்றவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்பைத் தங்கள் மனம் போனவாறு இணைத்துக் கூறியுள்ளனர்.

சித்தர்கள் எண்ணிக்கை

சித்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளோ ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுவுமே காணக்கூடியதாக இல்லை. இந்நிலையில் சித்தர்கள் எத்தனைபேர்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பதினெண் சித்தர்கள்

தில்லையில் திருமூலர், அழகர் மலையில் இராமதேவர், அனந்த சயனத்தில் கும்ப முனி, அருணையில் இடைக்காடர், வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி, எட்டுக்குடியில் வான்மீகர், மருதாசலத்தில் பாம்பாட்டி, மாயுரத்தில் குதம்பை, ஆருரில் கமல முனி, பழநியில் போகர், பரன்குன்றில் குதம்பை, திருப்பதியில் கொங்கணர், இராமேசுரத்தில் பதஞ்சலி, காசியில் நந்தி, கருவூரில் காங்கேயர், பொய்யூரில் கோரக்கர், சோதிரங்கத்தில் சட்டமுனி, மதுரையில் சுந்தரானந்த தேவர் எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிறது.

பதினெண்மர் என்னும் எண்ணிக்கை எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது என்பது விளங்கவில்லை. சித்த மருத்துவத் தொகையகராதியில் மொத்தம் இருபது பட்டியல்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒருவரோ பலரோ விடுபட்ட நிலையில் புதிதாகச் சிலர் சேர்க்கப்பட்டும் இருக்கக் காணலாம்.


பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்பன போல பதினெண் சித்தர்கள் என்னும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. சித்தர்கள் அனேகம் கோடி என்று சட்டமுனி குறிப்பிடுகின்றார். எனினும் பதினெண்மர் என வரையறை செய்ததன் நோக்கம் விளங்கவில்லை. ஆயினும் சித்தர்கள் வரிசையைத் தொகுத்த காலத்தில் இருந்த எண்ணிக்கையாகவோ அல்லது இக்கூட்டத்தில் தலைசிறந்த களாகவோ அல்லது நூல் மூலமாகப் புற உலகுக்கு அறிமுக மானவர்களாகவோ இருத்தல் வேண்டும்61 என்று இரா. மாணிக்கவாசகம் கருதுகிறார்.

“அக்கினிக் கலை 64இன் குணங்களைச் சைவத்தில் 64 திருவிளையாடல் களாகவும் சிவனடியார்களாகவும் சந்திரகலை 12ஐயும் வைணவத்தில் நாயன்மார் களாகவும் வழங்குகின்றனர்” என வடலூர் வள்ளலார் கருதுவது போல, இவை பதினெட்டும் தத்துவங்கள் எவற்றையாகிலும் உணர்த்துவதாக இருத்தல் கூடும் என்னும் கருத்தும் ஏற்புடையதாக அமையக் காணலாம்.

இலக்கியத்தில் சித்தர்

அகத்தியரை, ‘தென்தமிழை இயம்பியவன்‘, ‘காவேரி யளித்தவன்’ ‘விந்தம் அடக்கியவன்’ ‘இசைமேதை’ ‘சிவனை நிகர் பொதியமுனி’ என்றெல்லாம் தமிழ் இலக்கியம் கூறும். திரு மூலரை ‘யோகி’ ‘சிவனடியார்’, ‘திருமந்திர ஆசிரியர்’ என்பதும் இலக்கியம் தரும் செய்தி. நந்தி, சைவசித்தாந்தத்தின்முதல்வராக எண்ணப்படுகிறார். இடைக்காடரைத் திருவிளையாடல் புராணம் கூறும்.

இவர்களைப் பற்றி இத்தனை செய்திகளைக் கூறும் தமிழ் இலக்கியம், சித்தர் என்று இவர்களைச் சுட்டவில்லை. மேலும் பதினெண் சித்தர்கள் என்னும் வழக்கே தமிழ் இலக்கியத்தில் இடம் பெறவில்லை. சித்தர் என்னும் ஒரு பிரிவு தமிழ் நாட்டில் இருந்திருந்தால் சேக்கிழாரும், பரஞ்சோதி முனிவரும் குறிப்பிடாமல் இருந்திருக்கமாட்டார்கள்.

சேக்கிழார் காலத்தில் பதினெண் சித்தர்கள் என்னும் வழக்கு இருந்திருந்தால் அதில், திருமூலரும் இடம் பெற்றிருந்தால், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திருமூலரைக் குறிப்பிட்ட சேக்கிழார், சித்தர் என்றும் குறிப்பிட்டிருப்பார். பெரிய புராணச் செய்திகள் வரலாற்று நோக்கில் தரப்படும் செய்திகளாக இருக்கும் போது, சித்தர் பற்றிய செய்தி காணப்படாததற்குரிய காரணம் புலப்படவில்லை.

அதே போல், இசை, குதிரை, நவமணிகள் போன்ற செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்ற பரஞ்சோதி முனிவர், சித்தர்களைப் பற்றிக் கூறும் வாய்ப்பு இருந்தும் கூறவில்லை. எல்லாம் வல்ல சித்தரான படலம், கல்யானைக்குக் கரும்பருந்திய படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்னும் மூன்று படலங்களில் சித்தர்களைக் குறிப்பிடும் சூழல் இருந்ததால் கூறியிருக்கலாம் என்று சே. பிரேமா கருத்துத் தெரிவிக்கின்றார். சேக்கிழாரும், பரஞ்சோதி முனிவரும் குறிப்பிடவில்லை என்பதால் சித்தர்கள் யாரும் இல்லை என்பது பொருந்துவதாகத் தோன்றவில்லை. பெரிய புராணம், சித்தர் புராணமில்லை; திருவிளையாடல் புராணம் சித்தர்களின் திருவிளையாடலைக் கூற இயற்றப்பட்டதன்று. இவ் விரண்டும் சைவ மத நூல்கள். திருவிளையாடலில் எல்லாம் வல்ல சித்தர் என்னும் தொடர் சித்தரைப் போலச் சிவபெருமானும் என்று சித்தரிக்கப்படுகின்றார் என்பதையே காட்டும்.

“பாண்டியர் பாண்டிய நாடு என்னும் இவற்றைச் சிறப்பித்துக் கூற இயற்றப் பட்டதே திருவிளையாடல் புராணம்” என்றதால் சித்தர்கள் பற்றிய செய்தி இடம் பெறவில்லை. சிவனே முதல் சித்தன் என்னும் போது, அவனுக்குப் பின்தானே மற்றவர்கள். அதனால், சிவனைக் குறிப்பிடும் காலத்தில் வேறு எவரும் சித்தர் நிலைக்கு உயர்ந்தவராக இல்லை என்றும் கருதலாம். அல்லது, சித்தர்கள், வேந்தர்களாகவோ, மதம் சார்ந்தவர்களாகவோ இருந்திருந்தால், இலக்கியமும் வரலாறும் இயம்பியிருக்கும். அந்நிலையில் சித்தர்கள் இருந்ததாகக் குறிப்பிடவில்லை என்றும் கருதலாம். மனித வாழ்வில் இயல்பாக நிகழ்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் என்ன? என்ன? என்று கேட்டுக் கொண்டு செல்கின்றவர்களாகவும் அவை, தேவையற்ற செயல் என்று கருதக் கூடியவர்களாகவும் இருந்ததனால் சித்தர்களுக்கு மக்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் வரலாறும் இலக்கியமும் சித்தர்களைச் சுட்டவில்லை எனலாம்.

சித்தர்களின் இருப்பிடம்

சித்தர்கள் தங்கள் இருப்பிடமாக மக்கள் வாழ்விடங்களைத் தேர்வு செய்யாமல், மலைகளிலேயே இருந்திருந்ததாகத் தெரிகிறது. மலை என்பது, தனிமை, அமைதி, மூலிகை போன்றவற்றின் இருப்பிடம் என்பதால் அவ்விடங்கள் சித்தர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருந்தன.

பொதிகை மலையில் அகத்தியரும், மேருவுக்கு வடக்கே தட்சிணா மூர்த்தியும் காவி உடையுடன் வாழ்ந்தாகத் தெரிகிறது. சதுரகிரி மலையின் வடபாகத்தில் பலர் வாழ்ந்ததாகத் தெரிகிறது. சித்தர்களும் அவரவர்தம் ஆசிரமங்களும் மொத்தம் 207 என மலைவாகடம் குறிப்பிடுகிறது. விராலி மலையில் தொன்மையான சித்தர் முனி குடியிருப்பு இருந்தது. அம்மலையில் சுனையுண்டு. உதகமுண்டு என்று குறிப்பிடப்படுகிறது. விராலி மலை உச்சியில் கணேசர் கோயில், கல்லால மரம், ஓட்டை மண்டபம், புலி உறங்கும் வாய்க்கால், ஆயக்கால் மண்டபம், கரு நெல்லி போன்றவை இருக்கும். அந்த நெல்லி மரத்தடியில் தென் பாண்டிச் சித்தர் ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க வீற்றிருந்தார். அவ்வேளையில் பரஞ்சோதி முனிவர் அங்கு வந்து, பாண்டிச் சித்தரிடம் உபதேசம் பெற்றார் என்பர். விராலி மலையில் பாண்டிச் சித்தர் ஆயிரம் பேர் முன்னிலையில் வீற்றிருந்தார் என்பது மிகையாகும். சித்தர் முன் வீற்றிருப்போரெல்லாம் அவரின் மாணவர்கள் எனலாம். பரஞ்சோதி முனிவர் கி.பி. 1647ல் பாண்டி நாட்டில் வாழ்ந்தவர் என்பர். பொதிகை மலையில் வாயு மூலைப் பக்கத்தில் பெரிய அசோக மரத்தின் கீழே அமர்ந்து அறுபத்து மூன்று பேர்களுக்கு எண்வகையான யோகத்தைக் கற்பித்ததாகப் போகர் குறிப்பிடுகிறார். கொங்கணர், தன்னைப் போகரின் மாணவர் என்றும் அவருடன் சேர்த்து 557 பேர்கள் மாணவராக இருந்ததாகவும் கூறக் காணலாம்.

இவ்வாறாக சித்தர்கள் பலர் மலைகளில் குடில் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தாகத் தெரிகிறது. ஆனால், சித்தர்களின் எண்ணிக்கை என்ன என்று கூறமுடியாத அளவுக்கு மிகுந்து காணப்படுகிறது. சித்தர்கள் பதினெண்மர் என்று கூறும் மரபு முறையானதாகத் தோன்றவில்லை. அந்த எண்ணிக்கை ஏதோ ஒன்றன் குறியீடு எனக் கொள்வதே சரியாகும். கீழ்க்கணக்கு, மேல்கணக்கு,புராணம் என்பன பதினெட்டாகக் கொள்ளப் படுதல் போன்று சித்தர்களும் பதினெண்மராகக் கருதப்பட்டிருக்கலாம்.

சித்தர்களில் ஆசிரியர் மாணவர்

சித்தர்களுக்குச் சித்தர் ஆசிரியராகவும் மாணவராகவும் இருந்தது தெரிய வருகிறது. ஒரு சில முறைகள், ஒரு சிலரின் தனித்தன்மையாக இருக்கும். அதனைப் பிறர் அறிய நேர்ந்தால், அவரிடமிருந்து அதைக் கற்றேன் என்றும், அவர் எனக்கு உபதேசித்தார் என்றும் கூறுகின்ற பண்பு சித்தர் களிடம் காணப்படுகிறது. அவ்வாறு கற்றுக் கொள்ளும் போது ஆசிரியர்மாணவர் என்னும் நிலையில் கற்கப்படுகிறது.

ஆசிரியர் மாணவர் ஆசிரியர் மாணவர்

நந்தி சிவயோகமுனி அகத்தியர் போகர்
சிவயோகமுனி காலாங்கிநாதர் தேரையர் யூகிமுனி
காலாங்கிநாதர் போகர் போகர் கோரக்கர்
போகர் கொங்கணர் திருமூலர் காகப்புசண்டர்
போகர் புலிப்பாணி ரோமரிஷி இராமதேவர்
நந்தி திருமூலர் அகத்தியர் திருவள்ளுவர்
சிவன் திருமூலர் சட்டமுனி மச்சமுனி
திருமூலர் கொங்கணர் திருமூலர் பிண்ணாக்கீசர்

என்று, சித்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கொண்டிருக்கும் தொடர்பைக் கொண்டு ஆராய்ந்தால், அனைவரும் சமகாலத்தவர்கள் போலத் தோன்றும். சித்தர்கள் காலம் கடந்தவர்கள் எனக் கருதப் படுவதால், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவரோடு ஏற்பட்ட தொடர்பைக் குறிப்பதாகவே கருத வேண்டும். போகர்7000 என்னும் நூல், சித்தர்களின் தலைமுறை, பிறந்த நட்சத்திரம், தாய் தந்தையர், மொழி, சாதி போன்ற பல தகவல்களைக் குறிப்பிடுகிறது. இவை நம்பக் கூடிய தகவல்கள் என்பதற்கு வேறு சான்றுகள் எதுவும் புலப்படவில்லை.

சித்தர்கள் குடும்பம்

சித்தர்கள் யோக நெறியில் முத்தி பெற்றவர்கள். மனைவி மக்கள் என்னும் பாச எல்லையைக் கடந்தவர்கள். துறவு நிலையடைந்தவர்கள் என்னும் கருத்துக்கு மாறாக, பதினெண் சித்தர்கள் எனக் குறிப்பிடப்படும் அனைவரும் இல்லற இன்பத்தில் ஈடுபட்டு மனைவி மக்களுடன் வாழ்ந்திருந்தார்கள் என்று கோரக்கரின் முத்தாரம் கூறுகிறது. போகர் என்னும் சித்தரைத் தவிர பிற சித்தர்களின் மனைவியர் 173 ஆகவும் மக்கள் 1867 ஆகவும் குறிப்பிடப் படுகிறது. அதிக எண்ணிக்கையில் மனைவியை உடையவ ராகப் பாம்பாட்டிச் சித்தர் (16) குறிப்பிடப்படுகிறார். அதேபோல் அதிக எண்ணிக்கையில் மக்களைப் பெற்ற மகராசனாக இராமதேவர் (200) குறிப்பிடப்படுகிறார். இத்தகவலும் உண்மையாகவும் உண்மையில்லாமலும் இருக்கலாம். உண்மையறிய சான்றுகள் இல்லை.

நம்நாட்டில் சமயத் தலைவர்கள், புலவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விடவும் அதிகமாகச் செவிவழிச் செய்தியே வழங்கப்படுகின்றன. அச்செய்திகளைச் சற்றும் ஆராயாமல் அப்படியே நம்பும் பழக்கம் நம்மிடையே மிகுந்து காணப்படுகிறது. இம்மயக்கத்திலிருந்து தெளிவடைந்து வரலாற்றை வரலாறாகப் பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு வரலாற்றுக்குரிய அடிப்படைச் சான்றுகள் திரட்டப்பட வேண்டும். சித்தர்களின் உண்மை வரலாறு வரையப்பட வேண்டும்.


சித்தர் பருவதம்

சித்தர்கள் மலைகளிலேயே தங்கள் குடிலை அமைத்துக் கொண்டு மருந்தாய்விலும் யோக நெறியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த மலை ‘சித்தர் பருவதம்’ என்று வழங்கப்படும். சதுரகிரி மலையையே சித்தர் பருவதம் என்பர்.

இம்மலையில் அனேக சித்தர்கள் வாழ்ந்ததாகச் சதுரகிரிமலை தலபுராணம் கூறுகிறது. சதுரகிரி மலையைச் சித்தர்கள் பல பெயர்களால் வழங்கினர். போதகிரி, பொதிகைகிரி, சூரிய கிரி, மயேந்திர கிரி, கும்ப கிரி, பரம கிரி, கயிலாயம் என்னும் வேறு வேறு பெயர்களால் குறிப்பிடும் போது, இடங்களைக் கண்டறிவதில் மயக்கம் உண்டாகிறது.

சித்தர் மரபில் பெண்

சித்தர்கள் என்றால் அவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள். காடு மேடு என்றும் பாராமல் மலைகளிலும் குகைகளிலும் வாசம் செய்வார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால், ஆண்களைப் போலவே பெண்களும் சித்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

‘சுவாலை‘ என்னும் பெண் திருமூலர் மரபில் தோன்றிய சித்தராகக் கருதப்படுகிறார். திருமூலரின் மரபு வழி மாணவர்களில் ஒருவரான ‘சுவால மூர்த்தி’ என்பவர், சுவாலை என்னும் பெண்ணுக்குச் சித்தர் நெறியையும் யோக முறைகளையும் கற்றுத்தந்தவர் என்பர். சித்தர் நிலையை அடைந்திருந்த சுவாலையை, செகத்துவாசன் என்னும் மன்னன் கூடி தாய்மை நிலையை அடையச் செய்தான் எனத் தெரிவிக்கின்றார். சித்தநெறிகளைப் பெண்ணும் பின்பற்றலாம் என்பதும், சித்த நிலையை அடைந்த பின்னும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிகிறது.

சித்தர் தோற்றம்

சித்தர்கள் பல்வேறு தோற்றங்களில் இருந்துள்ளனர் எனத் தெரிகிறது. தாடியுடன் கூடிய சடைமுடியுடனும், நிர்வாண கோலத்திலும், லங்கோட்டோடும், வெளுத்த செம்மறியாட்டுத் தோலாலான வெள்ளைப் போர்வை யுடனும், புலித்தோலாலான ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும் காட்சியளித்துள்ளனர்.

உடை

அகத்தியர், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் காவியாடை அணிந்தது தெரியவருகிறது.

உடைமை

சித்தர்களிடம் வீரவட்ட சங்கிலி, லாட சங்கிலி, இரும்பு சங்கிலி, ஊசி போன்ற குறடு, வேல் போன்ற கைத்தடி, செய கண்டி, தாமிர பாத்திரம், திருவெண்ணீறு போன்றவையும் காணப்படுகின்றன.

சித்தர்கள் பயன்படுத்திய உணவுப் பொருள்கள் வருமாறு:

அரிசி : தினை அரிசி, மூங்கிலரிசி, வெப்பாலரிசி போன்றவை.

கறிகள்: சிவப்புக் கற்றாழை, கரு நொச்சி, கல்தாமரை, சிவப்பு நாயுருவி, சிட்லாங் கிழங்கு, காட்டுப் பிரண்டை போன்றவை.

கிழங்குகள் : காட்டுக் கருணை, ஆட்டுக் கால் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, தாமரைக்கிழங்கு, தேள் கொட்டிக் கிழங்கு, நிலப்புரண்டிக் கிழங்கு என்பன.

கீரைகள்: எலிக்காது கீரை, ஆத்துப் பசலை, இரத்த விராலிக் கீரை, கொக்குக் கீரை, பேய்ப் புடலைக் கீரை, நரிக்கீரை, வெள்ளைக் குண்டுமணிக் கீரை, நிலாவரைக்கீரை என்பன.

குடிநீர்: இலையுதிர் விருச்சிக மரத்திலான பாண்டத்தில் சுனைநீர் சேமிக்கப்பட்டு, அதில் பேய்ப் புடலை, அந்தர கொத்தான், தாலிமரத்தின் ஓலை, செந்நெருக்கன் வேர், வெள்ளைக் கல்யாணி மரப்பூ, கல் மதப்பூ, சிறு களாப் பூ, அத்தி விதை, வெப்பாலைப் பால் போன்றவை கலந்து ஊறிய பின்னர் உண்டனர். அந்நீரில், திகைப்பூண்டு, மருவமத்தன், மதிமயங்கி, சடகஞ்சா ஆகியவை கலந்த மதுபானமும் உண்டனர்.

பாத்திரங்கள்: எருமை விருச்சிக மரத்திலான தட்டுகள், ஜோதி மரத்திலான குவளைகள் பயன்படுத்தப் பட்டன. பற்பொடி : ஜோதிப்புல் என்னும் மூலிகை பற்பொடியாகப் பயன்பட்டது. மேலும் தவசு முருங்கை மனைக்கட்டை, சந்தன மரத்தில் பாய்ந்த புல்லுருவி பாய், ஏர் அழிஞ்சில் கைத்தடி, போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்று எம்.எம். ஜெயராமன் கூறுகிறார்.

சித்தர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் சமவெளிகளில் காணப்படாத மலை நிலப் பொருள்களாக இருக்கக் காணலாம். இவர்கள் உண்ட கிழங்கு வகை உடலைப் பாதுகாக்கும் தன்மைகள் கொண்டவையாகவும், கீரை வகைகள் இரத்ததையும் உடல் தாதுப் பொருள்களையும் தூய்மைப் படுத்துவதுடன் வளர்த்துச் செழிப்படையச் செய்யக் கூடியவை என்றும் கூறப்படுகிறது.

ஆசனங்கள்

சித்தர்கள் தங்கள் உடலில் ஆற்றலை மேம்படுத்த உணவுகளைக் கையாண்டது போல, எட்டுவகையான யோக முறைகளைப் பயன்படுத்தும் போது, ஒன்பது வகையான இருக்கைகளை மேற் கொண்டனர்.

இந்த இருக்கைகள் ஆசனம் என்றும் யோகத்திற்காகப் பயன்பட்டதினால் யோகாசனம் என்றும் கூறப்படுகிறது. யோகாசனங்கள் மொத்தம் 126 எனச் சித்தர் நூலுள் கூறப்பட்டாலும் இவற்றுள் ஒன்பது ஆசனங்கள் சிறப்பானவையாகக் கூறப்படுகின்றன. அவை,

1. கோற்றிகம்; 2. சிங்கம்; 3. பத்திரம்; 4. முத்து 5. கோமுகம்; 6. வீரம்; 7. பத்மம்; 8. மயூரம்; 9. சுகம் என்பனவாகும்.

சித்தர் சமாதி

சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர்.

சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.

அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன.

சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது. ஆனால் புறநானூற்றுப் பாடலில் அதற்கான காரணம் விளங்கக் கூடியதாக அமைந்திருக்கக் காணலாம்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளியேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பிரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளு மிலவே

தமிழர்கள் வழிபடுமிடங்களெல்லாம், போர்க்களத்து வீர மரண மெய்திய வீரர்களின் நடுகல் அல்லாது, நெல்லைத் தூவி வழிபடும் தெய்வ வழிபாடு என்பது இல்லை என்கிறது.

தமிழர்களின் பண்டைய வழக்கின்படி தெய்வ வழிபாடு என்பது இல்லை. எல்லா வழிபாட்டு இடங்களும் நினைவுச் சின்னங்கள் என்பதே பொருந்தும். சில இடங்களின் வரலாறு மறைந்து இருந்தாலும் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து நடைபெறும்.

புறநானூற்றுச் செய்தியின்படி வீரர்களுக்கு மட்டுமே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதாகக் கருத முடியாது. புறநானூறு வீரத்தையும் வீரர்களின் புறச் செயல்களையுமே குறித்து இயற்றப் பெற்ற இலக்கியம் என்பதால், நினைவுச் சின்னங்கள் தோன்றுவதன் அடிப்படைகளுள் ஒன்றினைப் புறநானூறு கூறுவதாகக் கொள்ளலாம்.

கோயில்கள்

இறந்த மன்னர்கள், மெய்யறிவாளர்கள் முதலியோரின் நினைவிற்கு அறிகுறியாக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது கட்டப்படும் கோயில் பள்ளிப்படை அல்லது கல்லறைக் கோயில் அல்லது சமாதிக் கோயில் எனப்படும். இச்சமாதிகளுக்கருகில் அவர்கள் வழிபட்ட தெய்வங் களுக்கும் கோயில்கள் எழுப்பப்படுவதுண்டு.

வடார்க்காடு மாவட்டம் சோழபுரம் என்னும் ஊரில் இராசாதிய சோழன் தன் தந்தையின் புதைக் குழிக்கருகில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினான். தொண்டை மானாடு (சித்தூர்) என்னுமிடத்தில் முதலாம் ஆதித்த சோழனைப் புதைத்த சவக்குழிக்கருகில், அவன் மகனான முதலாம் பராந்தகன் ஆதீத்தீசுவரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான்.

முதலாம் இராசராசன் தன்மனைவி, பஞ்சவன் மாதேவியார் என்பவருக்காகப் பழையாறையில் அவள் புதைக் குழிக்கருகில் பஞ்சவன் மாதேவீசுவரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். இவ்வாறு கூறப்படும் சான்று களிலிருந்து கோயில்கள் பண்டைய திராவிடரின் கல்லறையிலிருந்தே தோன்றியவை என்பதும் அக்கல்லறையின் புனிதச் சின்னமாகக் கருதப்பட்ட பொருள்கள் சிவன் என்னும் உருவில் வழிபாடு செய்யப்பட்டுப் பின்னர் ஆரிய ருத்திரனோடு திராவிடச் சிவன் கலந்து தொல்கதைகளின் நாயகனாகி விட்டதால் அவை தொல்கதைகளைச் சித்திரிப்பனவாக மாறிவிட்டன என்பதும் தெளிவாகிறது.

தலமரங்கள்

தொல்காலத்து மக்களுக்கு வெட்டவெளி வாழ்க்கை இன்பமயமாகப் பட்டது. வெட்டவெளியிலுள்ள மரம் அவர்களின் இடுகாட்டின் இடமாயிற்று. எனவே தான் அதனடியில் புதைந்து அதனையும் தம் மூதாதையாரைப் போலவே புனிதச் சின்னமாகக் கொண்டு வணங்கினார்கள்.

ஆரியம் புகுந்தபின் இஃது ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு தனி மரமாகப் பிரிக்கப்பட்டுப் பின்னர் அக் கடவுளின் சின்னமாகக் கொள்ளப்பட்டன. (இந்தியக் கலை வரலாறு. பக். 317-337) என்று கலை வரலாற்று ஆய்வு தெரிவிப்பதால் சித்தர் சமாதிக்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.

தமிழ்ச் சமுதாயத்தில் ஆற்றல் மிக்க மனிதர்களுக்கும் சிறப்புக்குரிய முன்னோர்களுக்கும் சமூகத்தொண்டில் முனைப்புடனிருந்தவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் தோன்றின. அவ்வாறு உருவானதே சித்தர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் திருக் கோயில்கள். யோகத்தினால் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இருக்குமிடங்களிலும் அடக்கமாகிய இடங்களிலும் அவர்களின் ஆற்றல் ஒளிக் கதிர்கள் சூழ்ந்திருக்கும். அந்த ஆற்றல் ஒளிக்கதிர்கள் எவர் மீது பட நேர்ந்தாலும் அவர்களுக்கு உற்ற உடல்துன்பம் மனத்துன்பம் போன்றவை நீங்கிவிடும் என்பது யோகியர்களின் கருத்து. அதனால், யோகியர்களும் சித்தர்களும் அடக்கமாகிய இடங்களுக்கு மக்கள் செல்ல நேர்ந்து, வழிபாட்டு நிலையங்களாக மாறின.

ஆரம்ப காலத்தில் இருந்த சித்தர் என்னும் நினைவு மாறி தெய்வம் என்னும் நினைவு தோன்றின. காலப்போக்கில் சித்தன் சிவனாகி, சிவன் சிவமாகி, சிவம் தெய்வமாகி இருக்கிறது. அதேபோல் சமாதி இல்லம் என்றாகியும் சித்தர் தலைமையைப் பெற்றதால் தலைவன் கோ என்றாகி, கோ இருக்குமிடம் கோவில் என்று மாற்றமடைந்திருக்கிறது.

இவற்றை காரணங்களாகக் கொண்டு உண்மையை ஆராய்ந்ததால் சிவன் கோயில்களுக்கும் சித்தர் சமாதிக்கும் உரிய தொடர்பும் காரண காரியத்துடன் விளங்கக் கூடியதாக இருக்கிறது.


(இந்தக் கட்டுரையின் மீதிப் பகுதியைப் படிக்க,  ”சித்தர் நெறி - Part 2 of 2” பகுதிக்குச் செல்லவும்.)

1 comment:

  1. தங்களது இக்கட்டுரை சித்தர்களை பற்றிய உண்மைகளை புரிந்துகொள்ள உதவியாக உள்ளது.

    ReplyDelete