Wednesday, June 11, 2014


அந்த உதிர்ந்த மலர்கள்!


"பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே! புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே!" என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்! 

அதுபோல, மடங்களின் அறைகளிலும், மனிதர்களின் வீடுகளின் மச்சுகளிலும், தாழ்வாரங்களிலும், பூட்டிக் கிடந்த பழைய அறைகளிலும், இன்ன பிற இடங்களிலும், யாரும் பாராமல், மூலைமுடுக்குகளில் தூக்கிப் போடப்பட்டு, காலமும் கரையான்களும் போட்டி போட்டுக் கொண்டு தின்று கொண்டிருந்த, தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடி அந்தக் காலத்தில் ஒரு மனிதர் அலைந்தார்.  "பத்துப் பாட்டில்" ஒன்றான "குறிஞ்சிப் பாட்டு" ஓலைச் சுவடிகள் கிடைத்தபோது, அதில் சில ஓலைகளைக் காணாததால், அந்தக் குறிஞ்சிப் பாட்டுச் செய்யுள்கள் பட்டியலிட்டுக் காட்டிய 99 வகையான மலர்களில், சில மலர்களின் பெயர்கள் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட, அந்தச் சில "உதிர்ந்த மலர்களைத்" தேடி, அந்த ஓலைச் சுவடிகளின் பிரதிகளுக்காய் அவர் அலைந்த அலைச்சலை என்னவென்பது?  இப்படி ஓலைகளைத் தேடி அலைந்து மறைய இருந்த பல தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்தவர்தான் திரு. உ.வே.சாமிநாதய்யர்!

உ.வே.சா. அவர்களின் "நல்லுரைக் கோவை-நான்காம் பாகம் (கட்டுரைகள்)" என்ற நூலில் உள்ள "உதிர்ந்த மலர்கள்" என்ற ஐந்தாவது கட்டுரையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

(உ.வே.சா.வின் அந்தக் கட்டுரையப் படிக்கக் கீழே உள்ள link-ஐ 'க்ளிக்’ செய்க!

"நல்லுரைக் கோவை-நான்காம் பாகம் (கட்டுரைகள்)"

 "உதிர்ந்த மலர்கள்"  இதில் ஐந்தாவது கட்டுரையாக வருகிறது!)

காணாமல் போய் ஆட்டம் காட்டி, அவரைப் பாடாய்ப் படுத்திய அந்தப் பொல்லாத மூன்றே மூன்று உதிர்ந்த மலர்களும், கடைசியில் ஒருவழியாக அவருக்குக் கிடைத்தே விட்டன! தருமபுரம் ஆதீனத்து மடத்தில், 'பழைய ஒன்றுக்கும் உதவாத ஓலைகள்' என்று நினைத்து, ஆடிப் பதினெட்டாம் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றில் கொண்டு போய்ப் போடப்பட இருந்த அந்த ஓலைகள், தப்பிப் பிழைத்து, அவரின் கண்களுக்குத் தென்பட்டு விட்டன! அந்த ஓலைகளில் ஒன்றில் தான் இந்த உதிர்ந்த மூன்று மலர்களைப் பற்றிய வரிகள் இருந்தன! ஆம்! தமிழ்த் தாயின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான "குறிஞ்சிப் பாட்டு" கடைசியில் முழுமையாகக் கிடைத்தே விட்டது! 

அந்தக் "குறிஞ்சிப் பாட்டு" சுட்டிய 99 வகை மலர்களின் பெயர்களையும் இப்பொழுது முழுமையாகப் பார்ப்போம்!

இதோ அந்த 99 மலர்களின் பெயர்கள்:

  1. காந்தள்
  2. ஆம்பல்
  3. அனிச்சம்
  4. குவளை (செங்கழுநீர்ப்பூ)
  5. குறிஞ்சி
  6. வெட்சி
  7. செங்கோடுவேரி
  8. தேமா 
  9. மணிச்சிகை (செம்மணிப்பூ)
  10. உந்தூழ் (பெருமூங்கில்)
  11. கூவிளம் (வில்வம்)
  12. எறுழம்
  13. கள்ளி (மராமரப்பூ)
  14. கூவிரம் 
  15. வடவனம்
  16. வாகை
  17. குடசம் (வெட்பாலைப்பூ)
  18. எருவை (பஞ்சாய்க்கோரை)
  19. செருவிளை (வெண்காக்கனம்)
  20. கருவிளை (கருவிளம்பூ)
  21. பயினி
  22. வானி
  23. குரவம்
  24. பசும்பிடி (பச்சிலைப்பூ)
  25. வகுளம் (மகிழம்பூ)
  26. காயா (காயாம்பூ)
  27. ஆவிரை
  28. வேரல் (சிறுமுங்கில் பூ)
  29. சூரல் (சூரைப்பூ)
  30. குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ)
  31. குறுநறுங்கண்ணி (குன்றிப்பூ)
  32. குருகிலை (முருக்கிலை)
  33. மருதம்
  34. கோங்கம்
  35. போங்கம் (மஞ்சாடிப்பூ)
  36. திலகம்
  37. பாதிரி
  38. செருந்தி
  39. அதிரல் (புனலிப்பூ)
  40. சண்பகம்
  41. கரந்தை (நாறுகரந்தை)
  42. குளவி (காட்டுமல்லி)
  43. மாம்பூ
  44. தில்லை
  45. பாலை
  46. முல்லை
  47. குல்லை (கஞ்சங்கொல்லை)
  48. பிடவம்
  49. சிறுமாரோடம் (செங்கருங்காலிப்பூ)
  50. வாழை
  51. வள்ளி
  52. நெய்தல்
  53. தாழை (தெங்கிற்பாளை)
  54. தளவம் (செம்முல்லைப்பூ)
  55. தாமரை
  56. ஞாழல்
  57. மௌவல்
  58. கொகுடி
  59. சேடல் (பவளக்கான் மல்லி)
  60. செம்மல் (சாதிப்பூ)
  61. சிறுசெங்குரலி (கருந்தாமக்கொடிப்பூ)
  62. கோடல் (வெண்கோடற்பூ)
  63. கைதை (தாழம்பூ)
  64. வழை (சுரபுன்னை)
  65. காஞ்சி
  66. நெய்தல் (கருங்குவளை)
  67. பாங்கர் (ஓமை)
  68. மராஅம் (மரவம்பூ, வெண்கடம்பு)
  69. தணக்கம்
  70. ஈங்கை (இண்டம்பூ)
  71. இலவம்
  72. கொன்றை
  73. அடும்பு (அடும்பம்பூ)
  74. ஆத்தி
  75. அவரை
  76. பகன்றை
  77. பலாசம்
  78. பிண்டி (அசோகம்பூ)
  79. வஞ்சி
  80. பித்திகம் (பிச்சிப்பூ)
  81. சிந்துவாரம் (கருநொச்சிப் பூ)
  82. தும்பை
  83. துழாஅய் (துளசி)
  84. தோன்றி
  85. நந்தி (நந்தியாவட்டைப்பூ)
  86. நறவம் (நறைக்கொடி)
  87. புன்னாகம்
  88. பாரம் (பருத்திப்பூ)
  89. பீரம் (பீர்க்கம்பூ)
  90. பைங்குருக்கத்தி (பசிய குருக்கத்திப்பூ)
  91. ஆரம் (சந்தனம்)
  92. காழ்வை (அகில்)
  93. புன்னை
  94. நரந்தம் (நாரத்தம்பூ)
  95. நாகம்
  96. நள்ளிருள்நாறி (இருவாட்சிப்பூ)
  97. குருந்தம்
  98. வேங்கை
  99. புழுகு (செம்பூ) 
மேலே காட்டிய 99 மலர்களில்,  8,9, மற்றும் 10 ஆவதாகக் காட்டப்பட்டுள்ள 'தேமா, மணிச்சிகை, உந்தூழ்'  என்ற இந்த மூன்று மலர்களே உதிர்ந்து போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட மலர்களாகும்!


No comments:

Post a Comment